மானாவாரி விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் திட்டம்
வருமானத்தைப் பெருக்க ஏதுவாக நடப்பாண்டு 29 மாவட்டங்களில் மதிப்பு கூட்டும் எந்திர மையங்கள் அமைக்க முன்வருமாறு மானாவாரி விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மானாவாரி விவசாயிகளின் வருமானம், பருவமழையை நம்பியே உள்ளது. அந்த நிலங்களில் சிறு தானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தமிழக அரசு நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
திட்டத்தின் இலக்கு
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அரசு மானியத்தில் மதிப்பு கூட்டும் எந்திர மையம் அமைத்து, அதன் மூலம் மானாவாரி விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றிவிட முடியும் என்பதே இந்தத் இந்தத் திட்டத்தின் இலக்கு.
எந்திரங்கள் அறிமுகம்
தமிழ்நாட்டில் மானாவாரி நிலங்களில் இதனை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்காக உற்பத்தி பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து, லாபம் ஈட்டும் வகையில், தமிழக அரசு அப்பகுதிகளில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மதிப்புக் கூட்டும் எந்திரங்களை அறிமுகப்படுத்தியது.
மதிப்புக் கூட்டும் எந்திர மையம்
மானாவாரி நிலங்களில் விளையும் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் மரச்செக்கு மற்றும் இரும்புச் செக்கு எந்திரம்.
சோளம், கம்பு, கேழ்வரகு,தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை சுத்தம் செய்து, தரம் பிரித்து மாவாக மாற்றும் எந்திரம்.
துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறுவகைகளை தரம் பிரித்து, தோல் நீக்கி பருப்பாக மாற்றும் பயறு உடைக்கும் எந்திரம் மற்றும் மாட்டுத் தீவன எந்திரம் உள்ளிட்ட எந்திரங்கள், தேவைக்கு ஏற்ப மதிப்புக்கூட்டும் எந்திர மையத்தில் நிறுவப்பட்டுள்ளன.
ரூ.10 லட்சம் வரை மானியம்
இத்தகைய மையங்களை மானாவாரி பகுதிகளில் நிறுவ முன்வரும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 75 சதவீதம் மானியம், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2020-21ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, நடப்பாண்டில், 250 ஏக்கர் கொண்ட 3 ஆயிரம் மானாவாரி தொகுப்புகள் கண்டறியப்பட்டு, பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசு நடவடிக்கை
அவ்வாறு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் குழுக்களைக் கொண்டு, நடப்பாண்டில், 10 லட்சம் ரூபாய் மானியத்தில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 29 மாவட்டங்களில், 29 மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு தேவையான கட்டிட வசதியை விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
மதிப்புக்கூட்டும் மையம் அமைக்க விரும்பும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமோ அல்லது கூட்டுப்பணைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களோ, தங்கள் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் அல்லது மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு
மேலும் விபரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் தலைமையகத்தைத் 044-29515322, 29515422, 29510822, 29510922 என்ற தொலைபேசிஎண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர aedcewrm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
Post a Comment