தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் நிலைய சேமிப்பு!
இந்தியா போஸ்ட் என்ற பெயரில் அஞ்சல் சேவைகள் நாடு முழுவதும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்களும் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. கொரோனா போன்ற இக்கட்டான சமயங்களில் வேலை இல்லாத சூழல் ஏற்படும் போது சேமிப்புப் பணம் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே அஞ்சலக சேமிப்பு அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது

நவம்பர் மாதத் தொடக்கத்தில் தபால் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை (மினிமம் பேலன்ஸ்) உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 50 ரூபாயாக இருந்தது. இதை 2019ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 500 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த விதிமுறை கடந்த ஆண்டின் டிசம்பர் 12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சேமிப்புக் கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை 500 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

டிசம்பர் 11ஆம் தேதியைத் தாண்டியும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத நபர்களுக்கு அபராதக் கட்டணமாக அவர்களது சேமிப்புக் கணக்கிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 100 ரூபாய் கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீடிக்கும் பட்சத்தில் இருப்புத் தொகை குறைக்கப்பட்டு சேமிப்பு கணக்கு காலாவதி ஆகிவிடும். எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கின் இருப்புத் தொகையை வருகிற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் ரூ.500 ஆக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று அஞ்சல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post