ஆடு, மாடு மற்றும் நாட்டுக் கோழிகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, அரசின் மூலம், இலவச கொட்டகை அமைத்து தரப்படும் என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில், கடந்த ஜூலை 25ம் தேதி அறிவித்தார். இத்திட்டம், முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.இதற்கான அரசாணையை வெளியிட்டு, கால்நடை மருந்தகங்கள், கிளை நிலையங்கள் மூலம், விவசாயிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி வருகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, விவசாயிகளிடம் இருந்து கால்நடை துறையினர் வாங்கி, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பர். பின்னர், அந்த விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பங்களை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர், ஆவின் துறை உதவி ஆய்வாளர் மற்றும் கால்நடை துறை ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு, விண்ணப்பித்த விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கால்நடைகள் வளர்த்து வருகிறார்களா, வீட்டருகே கொட்டகை அமைக்க போதிய சொந்த நிலம் உள்ளதா என, ஆய்வு செய்யும். பின்னர், தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து, திட்ட அலுவலர் மூலம், ஆட்சியருக்கு அனுப்பி, நிர்வாக அனுமதி பெறப்படும்.
கொட்டகை அமைக்கும் பணியில், நுாறு நாள் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். மேலும், ஊராட்சி நிர்வாகம் கொட்டகை அமைக்கும் பணியை, வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வையிடுவார். பணிகள் முடிந்தபின், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கொட்டகை ஒப்படைக்கப்படும்.
ஆவின் துறை மூலமும்...
மாட்டு கொட்டகை அமைப்பதற்கு, இரண்டு மாடுகளுக்கு, 79 ஆயிரம் ரூபாய் என, மாடுகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, அதிகபட்சமாக 10 மாடுகளுக்கு, 2.15 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஆவின் துறை மூலம், பயனாளிகளுக்கு, 200 மாடுகள் வழங்கப்படும். அதே போல், 10 ஆடுகளுக்கு, 85 ஆயிரம் ரூபாய் என, எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 30 ஆடுகள் வரை, 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.இதே போல், 100 நாட்டுக் கோழிகளுக்கு 77 ஆயிரம் ரூபாய் என, அதிகபட்சமாக 250 கோழிகளுக்கு, 1.03 லட்சம் ரூபாய் கொட்டகை அமைக்க இலவசமாக வழங்கப்படும்.
Post a Comment