இலவசக் கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
தமிழக அரசால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விலையில்லா கறவை பசுக்கள் ( Dairy Cows) வழங்கும் திட்டம் 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2020-21ம் ஆண்டிலும், முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 8 கிராம ஊராட்சிகளுக்கும் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 74 கிராம ஊராட்சிகளுக்கும் கிராமக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கிராம ஊராட்சிகளில் 29.09.2020 முதல் இத்திட்டத்திற்கு பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து தகுதியான பயனாளிகள் பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கறவை மாடு வழங்கும் திட்டத்துக்கு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
கடந்த ஆண்டு முதல்கட்டமாக 12 ஆயிரம் கறவை மாடுகள் வாங்குவதற்கு ரூ.56 கோடி செலவிட அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த தொகையில், விவசாயப் பண்ணையை பலப்படுத்துவதற்காக ரூ.12 கோடியும், கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.36 கோடியும், காப்பீட்டுச் செலவுக்கு ஒரு கோடியே 80 லட்சமும், மாடுகளை கொண்டு வரும் போக்குவரத்து செலவிற்காக ரூ.3 கோடியும், பயனாளிகளின் போக்குவரத்து செலவுக்கு ரூ.1 கோடியே 20 லட்சமும், சில்லறைச் செலவுகளுக்காக ரூ.2 கோடியும் செலவிடப்படும்.
ஒரு கறவை மாடு ரூ.30 ஆயிரம் செலவில் வாங்கப்படும். மாடு கொள்முதல் செய்யப்படும் தொகையில் 5 சதவீதம் காப்பீட்டிற்காக செலவிடப்படும். ஒவ்வொரு மாட்டிற்கும் சராசரி போக்குவரத்து செலவு ரூ.2,500 தரப்படும். பயனாளிகளுக்கான போக்குவரத்துச் செலவு ஆயிரம் ரூபாய். புகைப்படம் எடுத்தல், எரிபொருள் செலவு, எழுத உதவும் சாதனங்கள் உள்ளிட்ட சில்லறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
பயனாளிகள் யார்?
இலவச கறவை மாடு வழங்கும் திட்டத்தின் முக்கியப் பயனாளி மகளிராக இருக்க வேண்டும்.
திருநங்கை இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இந்த திட்டத்தில், குடும்ப பொறுப்பை கவனித்து வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விதவைப் பெண்கள், ஆதரவற்ற பெண்கள், ஊனமுற்ற பெண்கள் ஆகியோருக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.
பயனாளியின் வயது 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயனாளியின் பெயரிலோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது.
பசுவுக்கு தேவையான பசுந்தீவனத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் கொஞ்சமாக நிலம் இருந்தால் பரவாயில்லை.
தற்போது சொந்தமாக பசுக்களோ அல்லது எருமை மாடுகளோ இருக்கக்கூடாது.
பயனாளியோ அல்லது அவரது வாழ்க்கை துணையோ, தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரில் ஒருவர்கூட மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றுபவராக இருக்கக்கூடாது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் எதிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
இலவச கறவை மாடு பெறும் பயனாளிக்கு, இலவச ஆடு வழங்கப்படமாட்டாது.
பயனாளிக்கு கிராம பஞ்சாயத்தில் நிரந்தர வீடு இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடர் சமூககத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஒரு சதவீதம் பேர் பழங்குடியின மக்களாகவும் இருக்க வேண்டும்.
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் இருந்து கறவை மாடுகள் கொள்முதல் செய்யப்படும்.
கறவை மாடு பெறும் பயனாளியிடம் இருந்து, கறவை மாட்டை குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று உறுதிமொழி பெறப்படும்.
இலவச ஆடுகள்...
ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் உடனடி நடவடிக்கையாக, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் (வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு) இலவசமாக வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில், கிராமப் பகுதிகளில் மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள 7 லட்சம் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு 4 ஆடுகள் வீதம் இலவசமாக வழங்கப்படும்.
இந்த ஆண்டு கோடி கணக்கில் செலவில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் வழங்கப்படுகின்றன. இந்த தொகையைக் கொண்டு விவசாயப் பண்ணையை பலப்படுத்த ரூ.5 கோடியும், ஆடுகள் கொள்முதல் செய்ய ரூ.120 கோடியும், காப்பீடு, போக்குவரத்து செலவுக்காக ரூ.5 கோடியும், சில்லறை செலவுகளுக்காக ரூ.5 கோடியும் ஒதுக்கப்படுவது வழக்கம்
இலவச ஆடுகள் பெறுவோர் மகளிராக இருக்க வேண்டும்.
அவருக்கு நிலமில்லாத விவசாய கூலியாக இருக்க வேண்டும்.
அதற்கான சான்றிதழை வி.ஏ.ஓ.விடம் வாங்கித் தர வேண்டும்.
பயனாளியின் வீட்டில் ஆடு மேய்க்க வசதியாக 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் இருத்தல் அவசியம்.
கறவை மாடு பெறுவோர் இலவச ஆடுகளை பெற முடியாது.
ஆடுகளை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு விற்கமாட்டேன் என்று பயனாளியிடம் உறுதிமொழி பெறப்படும்.
மற்றபடி கறவை மாடுகள் வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் ஆடுகள் வழங்குவதிலும் பின்பற்றப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
1. ஆதார் அட்டை நகல்
2.ரேஷன் கார்டு
3.PIP NUMER
4. வங்கி கணக்கு புத்தகம்
5. நூறுநாள் வேலை திட்ட கார்டு எண்
6. விதவை, ஊனமுற்றோர், திருநங்கை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் CERTIFICATE தேவை
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அணுகி நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
Post a Comment