இந்திய நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். இந்தச் சட்டங்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்?


விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டங்கள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன?

மொத்தம் மூன்று சட்டங்கள். 1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,  Essential Commodities (Amendment) Act 2020, 

2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020,

 3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020 என அழைக்கப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்க முடியும்

 அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

வெங்காய சந்தை
விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது.

 

இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்தைப் பொருத்தவரை விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது. 

வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.

மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்ட்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.


மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும், கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும் வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு.

இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



Post a Comment

Previous Post Next Post