விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்
விவசாய மின் இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்கும் குறியீட்டிற்கு தகுந்தவாறு விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய மின் இணைப்பு வேண்டுவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் ஆவணங்களை விண்ணப்பதாரர் இணைக்கவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமை சான்று. உரிமை சான்றில் கிணறு மற்றும் நிலம் மனுதாரருக்கு சொந்தமானது என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கவேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் இடம் இருந்து கிணறு அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் வரைபடத்தை இணைக்க வேண்டும்.
சிட்டா அடங்கல்.
பட்டா / பத்திரம் நகல்
கிணறு அரசுக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு, ஆற்றுப்படுகையோரம் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அருகில் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெறப்படவேண்டும்.
குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்படவேண்டும்.
விண்ணப்பத்தில் கிணற்றின் உரிமையாளர் கையெழுத்திடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களாக இருந்தால் அனைவரும் கையெழுத்திடவேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நபரின் பெயரில் மின் இணைபபு பெற மற்ற நபர்கள் மறுப்பின்மை சான்றிதழ் வழங்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாய விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்கப்படும்.
விவசாய மின் இணைப்பு கீழ்க்கண்ட இனங்களுக்கு மதிப்பீட்டுத் தொகை எதுவும் பெறாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
சாதாரண வரிசை திட்டத்தில் மின் இணைப்பு பெற எல்லா பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
ஜீவன்தாரா திட்டத்தில் மின் இணைப்பு பெற, கிணறு ஜீவன்தாரா திட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது என்பதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மேற்கண்ட இனத்தைச் சாராதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விதவைகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், பழங்குடியினர் மற்றும் கலப்பு திருமணம் செய்த நபர்களுக்கு ஒவ்வொருவருடமும் 150 எண்ணிக்கைகள் சிறப்பு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு கடித எண்.18.6.2010ல் பணிபுரியும் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரும் சேர்க்கப்பட்டு மேற்கண்ட குறியீடு 250 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட சிறப்பு பிரிவில் மின் இணைப்பு பெற வாரியத்தில் விண்ணப்பம் பதிவு செய்து ஒரு வருடம் கழித்து உரிய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களுடன் (முன்னாள் இராணுவத்தினர் தவிர்த்து) மேற்பார்வை பொறியாளர்/ஊரக மின்மயமாக்கல் மற்றும் மேம்பாடு (பகிர்மானம்)/தமிழ்நாடு மின்சார வாரியம், 144, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
முன்னாள் இராணுவத்தினர் தங்களது விண்ணப்பங்களை கூடுதல் இயக்குநர், முன்னாள் இராணுவத்தினர் நலப்பிரிவு, 22, இராஜா முத்தையா சாலை, சென்னை- 600 006 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யவும். மேற்கண்ட அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் சிறப்பு முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் தாட்கோ மகளிர் திட்டத்தில் தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டமான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு, சிறப்பு முன்னுரிமையில் இலவசமாக ஒருமுறை மட்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர்களுக்கு துரிதமுறையில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Download Timer
Post a Comment