விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு, விஏஓ (VAO) அளிக்கும் சான்றிதழ் மட்டுமே போதுமானது என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Tamil Nadu Electricity Regulatory Authority) அறிவித்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு தேவையற்ற அலைச்சல் இனியில்லை. அதோடு, மின் இணைப்பும் தாமதமின்றி விரைவில் கிடைக்கும்.

ஆணையத்தின் விதிகளில் திருத்தம்

விவசாய மின் இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் பொருட்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் சில திருத்தங்களைச் ( Correction) செய்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதன்படி, மின் இணைப்பு கோரும் விவசாயக் கிணறு, கூட்டு உரிமையாக (Partnership) இருந்து, அவர் ஒப்புதல் தர மறுத்தால் விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதும். விண்ணப்பம் பதிவு செய்து ஏற்றுக் கொள்ளப்படும். இந்த விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அளிக்கும், கிணறு மற்றும் நில உரிமைச் சான்று மட்டுமே போதும். இச்சான்று பெறுவதற்கு, நிலத்தின் பட்டா மற்றும் விவசாயியின் ஆதார் எண் (Aadhar Card) ஆகியவற்றோடு விஏஓ அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம்.

மின் இணைப்பு பெறுதல்

மின் இணைப்பு வழங்குவதற்கான மின்மாற்றி (Transformer), மின்கம்பி (Power Cord) சம்மந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னர், விண்ணப்பித்த விவசாயிக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள், விவசாயி மின் இணைப்புக்கு ஏற்ற வகையில் தயாராகி இருக்க வேண்டும். தயார் நிலையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரியப்படுத்தினால், 3 நாட்களுக்குள் மின்சார இணைப்பு வழங்கப்படும்.

அரை ஏக்கர் பாசன நிலத்திற்கு மின் இணைப்பு

ஒரு சர்வே எண்ணில் (Survey No.) அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு இரு கிணறுகள் இருக்கும் பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருந்தால், ஒவ்வொரு கிணற்றிற்கும் தனித்தனி மிட் இணைப்பு வழங்கப்படும். மேலும், ஒரே கிணற்றில், கிணற்றின் உரிமைதாரர்கள் அனைவரும் ஒவ்வோர் மின் இணைப்பிற்கும், அரை ஏக்கர் பாசன நிலம் (Irrigated land) இருந்தால், அந்தக் கிணற்றிற்கு தனித்தனியாக மின் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு இடமாற்றம்

தமிழகத்துக்குள் எந்தப் பகுதிக்கும் மின் இணைப்பை, இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் இவ்வாணையம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.





Post a Comment

Previous Post Next Post