நஞ்சில்லா உணவு (Non-toxic food)
இயற்கை விவசாயம் என்பது வழக்கத்திற்கு மாறான பன்மடங்கு சவால் மிகுந்ததாகும். எனினும், மண்ணையும், அதில் விளையும் பொருட்களையும் சாப்பிடுபவர்களின் நலனையும் கருத்தில்கொண்டு, நஞ்சில்லா உணவை அளிக்க வேண்டும் எனப்தே இயற்கை விவசாயிகளின் குறிக்கோள்.
அத்தகைய இயற்கை விவசாயத்தில், செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சாகுபடி செய்யும் முறையே அங்கக வேளாண்மை எனப்படுகிறது.
இவ்வாறு அங்கக முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் இதர பயிர்களின் விளைபொருட்களை விவசாயிகள் தனித்துவத்ததுடன் சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டில் அங்ககச்சான்றளிப்புத் துறை கடந்த 2007ம் ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
ஏற்றுமதி வாய்ப்பு (Export opportunity)
தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறை மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலமும் செயல்படுத்துப்பட்டு வருகின்றது.
இயற்கை வழி மேலாண்மை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அங்கக விளைபொருட்களை பதப்படுத்துவோர், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள் (Documents)
அங்ககச் சான்று பெற விவசாயிகள் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
பண்ணையின் பொது விபர குறிப்பு பண்ணையின் வரைபடம்
ஆண்டு பயிர்த்திட்டம்
மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், துறையுடனான ஒப்பந்தம்
நில ஆவணம்
நிரந்தர கணக்கு எண்
ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம்
கட்டணம்
இந்த ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும். சான்று கட்டணமாக தனிநபர் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.2700மும், தனிநபர் பிற விவசாயிகளுக்கு ரூ.3200மும், விவசாயிகள் குழுப்பதிவிற்கு ரூ.7200மும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9400 மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், அந்தந்த மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன் பெறலாம்.
Post a Comment