தாட்கோ (TAHDCO) [Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited]
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கமே தாட்கோ.
இதன் அலுவலகங்கள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடனுதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பழங்குடியினருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
1974-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கழகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான முதன்மை வளர்ச்சி முகமையாக செயல்பட்டு வருகிறது.
தாட்கோ நிறுவனத்தில் 100 பொறியாளர்கள், 524 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள் தமிழகத்திலுள்ள 30 மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரை தலைமையிடமாகக் கொண்ட மாவட்ட மேலாளர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் 7 கோட்டங்களிலுள்ள பொறியாளர் அலுவலகங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடனுதவிகள்
விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க கடனுதவி
ஆதிதிராவிட பெண்கள் தங்களது பெயரில் நிலம் வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஆதிதிராவிட மக்களின் நில உடமையை அதிகரிப்பதோடு, விவசாய உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகபட்சம் எத்தனை ஏக்கர் நிலம்
புன்செய் நிலமாக இருந்தால் 5 ஏக்கர் வரையும், நன்செய் நிலமாக இருந்தால் 2.5 ஏக்கர் வரையும் வாங்கலாம். இந்த திட்டத்தில் உத்தேசித்துள்ள நிலத்தை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேர்வு செய்யவேண்டும். நிலம் வாங்கும்போது முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
நிலம் வாங்கும் திட்டம் நிதியுதவி
அரசு வழிகாட்டு மதிப்பு (கைடுலைன்) அடிப்படையில் நிதியுதவி கணக்கீடு செய்யப்படும். மேலும், திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது ரூ.2.25 லட்சம் இந்த இரண்டில் எது குறைவோ அது சம்பந்தப்பட்ட பயனாளிக்கு மானியமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.
தகுதி, வழிமுறைகள்
ஆதிதிராவிடப் பெண்ணாக இருக்கவேண்டும்.
18 வயதுக்கு மேல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
நிலம் இல்லாதவராக இருக்கவேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கவேண்டும்.
நில உரிமையாளருடன் விலை குறித்து பேசி ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.
எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்?
அந்தந்த மாவட்ட தலைநகரில் உள்ள தாட்கோ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். அல்லது http://application.tahdco.com/home/add? என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன்
சாதிச் சான்றிதழ்,
வருமானச் சான்றிதழ்,
குடும்ப அட்டை நகல்,
வாங்க உத்தேசிக்கப்பட்ட நில கிரய ஒப்பந்தம்,
வில்லங்கச் சான்று,
சிட்டா அடங்கல் ஆகியவற்றை இணைக்கவேண்டும்.
நில மேம்பாட்டுத் திட்டம் என்ற திட்டமும் உள்ளது.
விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் நிலத்தை மாற்றுவது என்பது உள்பட தேவையான நில மேம்பாட்டு ஆதாரங்களை (பம்ப்செட் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம்) உறுதிசெய்ய இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதன் கீழ் வழங்கப்படும் கடனுதவியில் மானியமும் உண்டு.
பயனாளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தாட்கோ திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் தங்கலது மாவட்டத்திலுள்ள தாட்கோ மேலாளர் அல்லது, வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விரிவாக்க அலுவலரை அணுகி விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் கோரியுள்ள அனைத்து விபரங்களையும் உரிய முறையில் முழுமையாக பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரையறுக்கப்பட்ட காலட்த்திற்குள் மாவட்ட மேலாளர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலுள்ள ஆதிதிராவிடர் நல விரிவாக்க அலுவலரிடம் விண்ணப்பத்தினை நேரிடையாக அளித்து ஒப்புதல் சான்றினை பெறுதல் வேண்டும்.
மாவட்ட வாரியான தாட்கோ அலுவலகங்கள்
Post a Comment