இனி OTP (One time Pasword) இல்லாமல் சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது, நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறைகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் பெற OTP கட்டாயம்

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Gas cylinder) ஆர்டரின் பேரில் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யப்படுகின்றன. இதற்கான முன்பதிவு எஸ்.எம்.எஸ்., (SMS), கால் (Call), மொபைல் ஆப் (Mobile App) உள்ளிட்ட வசதிகள் மூலம் புக் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் சிலிண்டர் டெலிவரிக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிலிண்டர் திருட்டு, சிலிண்டரில் இருந்து எரிவாயு திருடப்படுவதைத் தடுக்கவும், சரியான வாடிக்கையாளரை அடையாளம் காணவும் இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

100 நகரங்களில் அறிமுகம்

முதற்கட்டமாக இந்தப் புதிய நடைமுறையானது 100 ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் பின் மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளை பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன்படி, சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP தோன்றும். இந்த OTP-யை சிலிண்டர் பெறும் போது விநியோகிப்பாளரிடம் கூறினால் போதும். இந்த குறியீடு காண்பிக்கப்படாத வரை, டெலிவரி முடிக்கப்படாது, நிலுவையில் இருக்கும்.
ஒருவேளை உங்களது மொபைல் எண் சிலிண்டர் விற்பனை நிறுவனத்துடன் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ அல்லது மொபைல் எண் மாறிவிட்டாலோ நீங்கள் அதை விநியோக சமயத்தில் புதுப்பிக்க முடியும். இதற்காக, டெலிவரி மேனிடம் ஒரு செயலி இருக்கும். டெலிவரி நேரத்தில் அந்த செயலியின் உதவியுடன் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் புதுப்பிக்கலாம்.

அந்த மொபைல் ஆப் மூலம் மொபைல் எண் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படும். அதன் பின்னர் அதே எண்ணிலிருந்து OTP-யை உருவாக்க முடியும். சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்கத்தில்தான் இந்தப் புதிய நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post