குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாகத் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பையுடன் நெய் பாட்டில் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் இதற்காக மதுரை ஆவினில் நெய் பாட்டில்கள் தயாராகி வருவதாகவும் தகவல் பரவியுள்ள நிலையில், மதுரை ஆவின் நிர்வாகமே தனது அறிக்கை மூலம் இதை உறுதி செய்தது.

ஆனால், ஆவினின் அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய குடும்ப அட்டைக்காரர்கள், ''அரசு ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பை தருகிறது. அதில் இந்த முறை 100 கிராம் அளவில் நெய் பாட்டிலும் சேர்த்துத் தருவதாக அறிவித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், அதில் சந்தேகம் உள்ளது. மதுரை ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பொங்கல் பை திட்டத்துக்கு 2,52,000 நெய் பாட்டில்கள் தயார் செய்து மதுரை, தேனி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என 9 மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் மொத்தம் 2 கோடிக்கும் மேலாக குடும்ப அட்டைகள், அதிலும் 9 மாவட்டங்களிலும் பல லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் 2,52,000 அட்டைகளுக்கு மட்டும் நெய் பாட்டில் விநியோகம் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது சும்மா கண் துடைப்பு அறிவிப்பா?'' என்றார்கள்.


பொங்கல் பையில் நெய் பாட்டில் அறிவிப்பு மக்கள் மத்தியில் ஆவலையும் அதே நேரம் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், உண்மை நிலை என்ன என்பது பற்றி மதுரை ஆவின் பொது மேலாளர் ஜனனி சௌந்தர்யாவிடம் பேசினோம். "பொங்கல் பையுடன் நெய் பாட்டில் விநியோகம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மட்டும்தான்.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அல்ல. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கத்தான் எங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள். இதுபோல மற்ற மாவட்ட ஆவின் நிறுவனங்களுக்கும் மாநில அளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.


பொங்கல் பையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்ப அட்டைகளுக்கு மட்டும் நெய் பாட்டில் விநியோகம் என்பதை தெளிவாகச் சொல்லாமல் குடும்ப அட்டைகளுக்கு என்று பொதுவாகச் சொன்னதால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post