பசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் இதோ
கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் பல்வேறு வகைகளில் நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், கால்நடைகளின் உற்பத்தித் திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் முக்கியமாகும்.
பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு கறவை மாடுகளுக்குத் தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் முக்கியமானது.
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவில் 65-70 சதவீதமானது தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செய்யப்படுகிறது. கால்நடைகளுக்கான பசுந்தீவனத்தின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
அதனால், இது போன்ற தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கால்நடை வளா்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் கடந்த 8 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூலம் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நிகழாண்டில் முழு மானியத்துடன் தீவன பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இறவையில் நிலையான தீவன உற்பத்தி மாதிரியை ஏற்படுத்துவதன் மூலம் தீவிர தீவன உற்பத்தியை மேற்கொள்வதற்கும், மானாவாரியில் தீவனச் சோளம், காராமணி, கம்பு கோ (எப்எஸ்) 29 மற்றும் டெஸ்மெந்தஸ் தீவன விதைகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இதில் பயன்பெற விரும்புவோர் கறவைப் பசுக்களையும், சொந்தமாக அல்லது குத்தகையாக 25 சென்ட் நிலமும், 3 ஆண்டுகளுக்கு சாகுபடி செய்யக் கூடியவராகவும் இருப்பது அவசியம் ஆகும்.
தேவைப்படும் ஆவணங்கள்
கால்நடைகள் எண்ணிக்கை விபரம்
நிலத்தின் பட்டா நகல்
ஆதார் அட்டை நகல்
2 passport size புகைப்படம்
தொலைபேசி எண்
தீவனத் தட்டைகள் சேதாரமாவதைக் குறைக்கும் பொருட்டு, புல் நறுக்கும் கருவிகளை (chaff cutter machine) 30 பேருக்கு 75 சதவீத மானியத்தில் அளிக்கப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட திட்டங்கள் அனைத்திலும் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்து வழங்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கால்நடை வளா்ப்போர், விண்ணப்பங்களை, அருகிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை உதவி மருத்துவரிடம் வரும் 25ம் தேதிக்குள் அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment