PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப
நீரின்றி எந்த உயிரும் வாழ இயலாது என்பது இயற்கை விதித்த விதி. அந்த வகையில் பயிரின் உயிரே நீர்தான். அதனால்தான், அவை முளைத்த சில நாட்களில் உயிர்த்தண்ணீர் விடுவது அவசியமாகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன வசதிகளை மானியத்துடன் வழங்கும் வகையில்,
பிரதான் மந்திரி கிரிஷி சின்சயா யோஜனா (Pradhan Mantri krishi Sinchayee Yojana) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
திட்டத்தின் சிறப்பு அம்சம்
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைத்துத் தரப்படுகிறது.
பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைத்துத் தரப்படும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு, அதாவது நஞ்சை நிலமாக இருந்தால் இரண்டரை ஏக்கர் அளவிற்கும், புஞ்சை என்றால் 5 ஏக்கர் அளவிற்கும் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மத்திய அரசின் 50 சதவீத மானியத்திலும், மாநில அரசின் 50 சதவீத மானியத்தையும் பெற்று இலவசமாகவே சொட்டு நீர் பாசனத்தை தங்களது நிலத்தில் அமைத்துக் கொள்ளலாம்.
இதர விவசாயிகள் மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசின் மானியம் 25 சதவீதத்தையும் பெற்று ஆக மொத்தம் 75 சதவீதம் மானியத்தை பெற்று சொட்டு நீர் பாசனம் அமைக்கலாம்.
சொட்டு நீர் பாசனம் அரசு மானியம்:- சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க அதிகபட்சமாக 43 ஆயிரத்து 816 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது இது 100 சதவீத சொட்டு நீர் பாசனம் மானியம் தொகையின் அளவு ஆகும்.
இந்த தொகையில் சிறு, குறு விவசாயிகள் காய்கறிகள், வெங்காயம், ஆகிய பயிர்களுக்கு 1 ஏக்கருக்கும், வாழை என்றால் ஒன்றரை ஏக்கருக்கும், பப்பாளி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா ஆகியவற்றுக்கு 3 ஏக்கர் முதல் 4 ஏக்கர் வரையிலும் சப்போட்டா, மா, தென்னை ஆகியவற்றுக்கு 5 ஏக்கர் வரையிலும் இலவசமாகவே சொட்டு நீர் பாசன கருவிகளை அமைத்துக் கொள்ளலாம்.
பெரிய விவசாயிகள் அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை 75 சத மானியத்தில் சொட்டுநீர் பாசனக்கருவியை எந்த பயிருக்கும் அமைக்கலாம்.
விவசாயக் கருவிகள்
இதுமட்டுமன்றி விவசாயிகளின் நலன் கருதி, அந்தந்த குறு வட்டங்களில் குறுகிய ஆழக்கிணறு அல்லது குழாய் கிணறு அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25,000 வழங்கப்படுகிறது.
இதே போல், டீசல் பம்புசெட் அல்லது மின்மோட்டார் பம்புசெட் அமைக்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.15,000 வழங்கப்படுகிறது
மேலும், வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்ல நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.10,000 வீதம் வழங்கப்படும்.
இதே போன்று, பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கு 50 சதவிகிதம் மானியம் அல்லது ஒரு கனமீட்டருக்கு ரூ.350 வீதம் அதிகபட்சம் ரூ.40,000 கூடுதல் மானியமாக வழங்கப்படுகிறது.
மேற்கண்ட மானியத்தை அனைத்து விவசாயிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
சிறு, குறு விவசாயி சான்றிதழ்
சிட்டா
அடங்கல்
நில வரைபடம்
புகைப்படம் 2
ரூ.5,816 லட்சம் ஒதுக்கீடு
மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழைத்தூவுவான் போன்ற நீர் சிக்கன அமைப்புகளை அமைத்திட ரூ.5,816 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், துணைநிலை நீர் மேலாண்மை திட்டங்களுக்காக விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1,324 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
மணியம் வழங்கும் முறை
மேலும் சிறு, குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அரசு மானியம் வாங்க தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும்.
ஆவணங்கள் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களில் விவசாயி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
அவ்வாறு தேர்ந்தெடுத்த நிறுவன பொறியாளர், விவசாயின் நிலத்தை ஆய்வு செய்து சொட்டு நீர் பாசன அமைப்பை அமைக்கும் முன் ஆய்வு செய்வார்.
பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
இந்த விண்ணப்பம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். பின்னர் அவர்கள் அதை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவர்.
அதற்கு பின் விவசாயின் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
எனவே தேவைப்படும் ஆவணங்களை விவசாயிகள் வேளாண்துறை அலுவலர்களிடம் சமர்ப்பித்து, இந்தத் திட்டத்துக்கான மானியத்தைப் பெற்று பயன்பெறலாம்
Post a Comment