சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி



ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், மத்திய அரசு சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கியின் மூலம் கடன் பெறலாம் என அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தின்கீழ், ஒரு வியாபாரிக்கு, அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்படும்.அதை, ஓராண்டுக்குள் அவர்கள் திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகளைத் தவிர வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலமும், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.



யாரெல்லாம் இதில் பயன்பெறலாம்


சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள், தெரு விற்பனையாளர்கள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலவை நிலையங்கள், பான் கடைகள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் 50 லட்சம் தெரு விற்பனையாளர்களுக்கு பயனளிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.



பிரதமரின் ஸ்வநிதி யோஜனாவின் சிறப்பம்சங்கள் (Prime Minister's Svanidhi Yojana Important Feature)

வியாபாரிகள் பணி மூலதனக் கடனாக பத்தாயிரம் ரூபாய் வரை பெற முடியும்.
இந்தக் கடன் ஓராண்டு காலத்தில், மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.

உரிய காலத்தில் இந்த கடன் தொகையைச் செலுத்தி வந்தால், அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தி விட்டால், ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும்.

இந்த மானியத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாக செலுத்தப்படும்.

பணத்தை முன்னதாகவே திருப்பிச் செலுத்தி விட்டால், அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட மாட்டாது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்களுக்கு, ஊக்கத்தொகையாக மாதமொன்றுக்கு 100 ரூபாய் திருப்பி அளிக்கப்படும்.
உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றின் மூலமாக, மேலும் அதிகக் கடன் பெற்று பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்கான தங்களது லட்சியத்தையும் தெரு வியாபாரிகள் அடைய முடியும்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

தங்களது மொபைல் எண்,
ஆதார் அட்டை எண்,
வங்கி கணக்கு புத்தகம்,
மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை,
குடும்ப அட்டை நகல்கள்

ஆகிய ஆவணங்களுடன் வங்கிக்கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களில் அல்லது பிரதமரின் ஸ்வநிதி மொபைல் ஆப் (PM SVANidhi Mobile App) அல்லது pmsvanidhi.mohua.gov.in
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.




Post a Comment

Previous Post Next Post