மண்ணின் வளத்தைப்பெருக்கவும், நுகர்வோரின் நலனையும் கருத்தில் கொண்டும், மதுரை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

விவசாயத்தில் அதிகளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து, மலட்டுத்தன்மையாகி, சுற்றுச்சூழல் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

ரசாயனத்தின் விளைவு (Effect of Chemicals)

மேலும் ரசாயன உரத்தை அதிகளவு பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை அதிகளவு படிந்து விடுகிறது. அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உடல் உபாதைகளையும், நோய்களையும் கொடுக்கின்றது.

இதனைத் தவிர்க்கும்வகையில் விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக தோட்டக்கலைத் துறைக்கு மாவட்டந்தோறும் அரசு தலா ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

ஊக்கத்தொகை (Incentives)

இதில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத் தொகையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை விவசாயம் செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500ம் மற்றும் காய்கறி பயிர்கள் விவசாயம் செய்ய ரூ.3800ம் ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது.

இத்துடன் சான்றிதழ் பெற ஒரு விவசாயிகளுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படுகிறது. எனவே 
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை உண்டு. இத்திட்டத்தில் ஊக்க தொகை பெற சம்பந்தப்பட்ட இயற்கை பண்ணையின் சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

தகவல்
கே.ரேவதி
துணை இயக்குனர்
தோட்டக்கலைத்துறை, மதுரை
0452 -253 2351






Post a Comment

Previous Post Next Post