இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் பேடிஎம் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் ஆப் ஆன்லைன் விளையாட்டுகளிலும், ஆன்லைன் சூதாட்டங்களிலும் வாடிக்கையாளர்களை பங்குபெறச் செய்ததாக கூகுள் குற்றம்சாட்டியுள்ளது
இந்தியாவில் சூதாட்டத்திற்கு எதிரான தனது புதிய நெறிமுறைகளை கூகுள் இந்தியா இன்று வெளியிட்டது. இதையடுத்து, பேடிஎம் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பேடிஎம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறை.
எனினும், பேடிஎம் மணி, பேடிஎம் ஃபார் பிசினஸ், பேடிஎம் இன்சைடர் உள்ளிட்ட பேடிஎம் நிறுவனத்தின் இதர ஆப்கள் இன்னும் பிளேஸ்டோரில் இருக்கின்றன
இதுதொடர்பாக கூகுள் வெளியிட்டுள்ள ப்ளாகில், “எங்களது கொள்கைப்படி, ஆன்லைன் கசினோக்கள் மற்றும் விளையாட்டு பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒழுங்குபடுத்தப்படாத சூதாட்ட ஆப்களை நாங்கள் அனுமதிப்பதில்லை.
ஏதேனும் ஆப் தங்களது நுகர்வோரை வெளி இணையதளங்களில் பந்தயங்களில் பங்கேற்கச் செய்து அவர்களுக்கு பணமும், ரொக்கப் பரிசுகளும் வழங்கினால் அது எங்களது கொள்கைகளை மீறுவதாகும்” என்று தெரிவித்துள்ளது.
கூகுள் தங்களது பயனர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்காகவே கொள்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஏதேனும் ஆப் விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்படும் எனவும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூகுள் இந்தியா எச்சரித்துள்ளது.
பேடிஎம் ஆப் இன்னும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment